1982ம் ஆண்டு தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆர்
அவர்களால் சட்டமன்றத்தில்
ஆரம்பிக்கப்பட்ட சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் 2லட்சத்து 68ஆயிரம் சத்துணவு ஊழியர்களில் 1லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஓய்வுப்பெற்று வீட்டிற்கு
சென்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் ஒன்றரை லட்சம் பேரும் 2018ல் ஓய்வுபெற
இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக
தொடர்ந்து பணியாற்றும் சத்துணவு
ஊழியர்கள் வாழத் தகுந்த ஊதியம் கேட்டு கடந்த காலத்தில் கலைஞர் ஆட்சியில்
உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை பார்த்து அன்றைய முதல்வர்
கலைஞர் நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிக்கை வெளியிட்டார்.
அப்போது
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையார் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
நியாயமானது. அதிமுக ஆட்சிக்கு வந்தால்
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து
அவர்களது ஊதியம் தொடர்பான
பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என
அறிக்கை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என கூறினார். 11.8.2014 அன்று
சத்துணவு ஊழியர்கள்
தங்களது வாழ்வாதாரத்துக்காக நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இன்றைய தமிழக முதல்வர்
ஜெயலலிதா போராட்டம் நடத்தும்
ஊழியர்களின் மீது
துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிடுகிறார்.
சத்துணவு
அமைச்சர் (சமூகநலத்துறை) பா.வளர்மதி, கேரளா,
கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில்
சத்துணவு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குகிறோம் என சட்டசபையில் செய்தி வாசிக்கிறார். அண்டை
மாநிலங்களில் ரொட்டி, பால், முட்டை,
உப்புமா போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில்
நடைபெறும் சத்துணவு
திட்ட முறைகளின்படி திட்டம் அங்கு நடைபெறவில்லை. மேலும் அண்டை மாநிலங்களில்
பணியாற்றும் ஊழியர்கள் 30 ஆண்டுகளாக
தொடர்ந்து அவர்கள் பணியாற்றவும்
இல்லை என்பதையும் அவர் அறியாதவர் போல் நடந்து கொள்கிறார்.
இன்றைய எதிர்க்கட்சிகளில்
ஒன்றான திமுக தலைவர் கலைஞர் சத்துணவு ஊழியர்கள் ஊதியம், பணி தொடர்பான பிரச்சனைகள்
முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள்
எடுக்கப்படும் என அறிவித்தார்! அதைச் செய்தாரா? என வினா எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தினந்தோறும் முட்டை வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தினார்கள். அதிமுக
ஆட்சியில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு
வாழைப்பழம் என சத்துணவுத்
திட்டத்தில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைத்து திட்டத்தை விரிவுப்படுத்தி பணிச்சுமையை
சத்துணவு ஊழியர்கள் தலையில்
சுமத்தி, பகுதிநேர
ஊழியர்களை முழுநேரம் பணி செய்ய பணித்திருக்கிறார்கள்.
இன்றைய நிலையில்
திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ.1,453
கோடி. மேலும் 68வது சுதந்திர
தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேலும் ரூ.103
கோடி கூடுதல்
செலவில் மசாலா முட்டை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சத்துணவு ஊழியர்கள்
புகை போகாத அடுப்புக்குள்ளே தங்களது வாழ்க்கையின் எதிர்காலத்தையும் தொலைத்து, தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும்
எண்ணி ஏங்கி
தவித்துக் கொண்டு சத்துணவு திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
சத்துணவு
ஊழியர்கள் மீது ஆட்சி கட்டிலில் இல்லாத போது இருக்கின்ற அக்கரையும், அனுதாபமும் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்தவுடன் திமுக மற்றும்
அதிமுக தலைவர்களுக்கு காணாமல் போகிறது ஏனோ?
அந்த விந்தை சத்துணவு
ஊழியர்களுக்கு விளங்கவில்லை என்பது வேதனைக்குரியது. 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சத்துணவுத் திட்டத்தில்
பணியாற்றிக் கொண்டு 25 ஆண்டுகளாக தொடர்ந்து
தங்களது வாழ்வாதாரத்திற்காக நடுரோட்டில் அமர்ந்து இன்றும் போராடிக் கொண்டிருக்கும் ஊழியர்கள்
அகதிகளா? இல்லை.
தமிழர்கள் தான். தமிழுக்காக, தமிழர் நலனுக்காக மாறி, மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி நடத்தும்
தலைவர்களுக்கே வெளிச்சம்.
29.08.2014
No comments:
Post a Comment