திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Thursday, October 14, 2010

திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஒரு நபர் குழு அறிக்கை ஏமாற்றம்

அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி 
குறைகளை களைய வலியுறுத்தி
பணி நீக்கம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 26.10.2010 அன்று மாலை
 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Saturday, October 09, 2010

A.I.S.G.E.F. பொன்விழா.

மாநில அரசு ஊழியர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 1960-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் ஜனவரி 23,24-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திர மாநில என்.ஜி.ஓ. யூனியனின் பெருமைமிகு தலைவர் ஸ்ரீ இராமுலுவின் சீரிய முயற்சியால் துவக்கப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்துள்ளன. சுமார் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக சம்மேளனம் விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநில இணைப்பு அமைப்புகளின் பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.

சம்மேளனத்தின் சாதனை

கடந்த 50 ஆண்டுகாலமாக, சம்மேளனத்தின் இடைவிடாத செயல்பாட்டின் காரணமாக பெரும்பான்மையான மாநிலங்களில் இன்று மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தர முடிந்துள்ளது. 1980க்குப் பிறகு மத்திய அரசில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்த தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடைபெற்றுள்ள 14 அகில இந்திய வேலை நிறுத்தங்களில், சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்று முத்திரை பதித்துள்ளனர். சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று 10.02.1988 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தமே, தமிழகத்தில் 1988ல் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் (ஜாக்டீ) போராட்டத்திற்கு வித்திட்டது. இந்த போராட்டமே தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சட்டமாக்கிட முயலும் புதிய பென்சன் திட்டத்தை இதுவரை தடுத்து நிறுத்திட முடிந்துள்ளது என்றால், அதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பங்கு மகத்தானது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்பு, எல்.ஐ.சி., வங்கி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும்,வேலை நிறுத்த உரிமையை அடிப்படை உரிமையாக்கிட வலியுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் குறிப்பிடும்படியான பாத்திரத்தை சம்மேளனம் வகித்து வருகிறது. வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக்கத்தில் ஏனைய வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நமது சம்மேளனம் பணியாற்றியுள்ளது.

போராட்டக் களத்தில் ஆதரவு

தமிழ்நாட்டில் 2003ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட நாடு முழுவதும் நிதி திரட்டி தமிழக அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாத்தது அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம். இன்றும் காஷ்மீர் மற்றும் பீகாரில் போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்து, நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவினை திரட்டி வருகிறது சம்மேளனம்.

இந்த காலகட்டத்தில் அகில இந்திய சம் மேளனம்,பெண்களை அணிதிரட்டி,அவர்களை பயிற்றுவித்து தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தவும் தவறவில்லை. சம்மேளனத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மாநில அமைப்பும் அம்மாநிலத்தில் பெண்களுக்கென்று ஒரு துணை அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த துணை அமைப்பின் பொறுப்பாளர்களை தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெண்களுக்கான அமைப்பு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். இதன் மூலம் பெண்களை தேசிய தலைவர்களாக அடையாளம் காட்ட முடிந்துள்ளது.

தமிழகத்தின் பங்கு

தோழர் எம்.ஆர்.அப்பன் சம்மேளனம் உருவான 1960-ம் ஆண்டிலிருந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு வந்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தோடு இணைந்து செயலாற்றிட வலியுறுத்தி வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சம்மேளனக் கூட்டங்களில் எம்.ஆர்.அப்பன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கைக் குழு உருவாகி செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிக்கக் கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர் (1984) மும்பையில் 1985ல் நடைபெற்ற சம்மேளனத்தின் 6-வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் அகில இந்தியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 7வது தேசிய மாநாடு 1990, மே மாதம் 12 முதல் 15 தேதிகளில் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்து (1984) குறுகிய காலத்தில் அகில இந்திய மாநாட்டை நடத்திட முன்வந்தது, அனைத்து மாநில பிரதிநிதிகளின் பாராட்டை பெறத்தக்கதாக அமைந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற 9வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் சம்மேளனத்தின் கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த கே.கங்காதரன் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக சம்மேளனத்தின் 11வது தேசிய மாநாடு 2002 டிசம்பர் மாதம் 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மும்பையில் 2005-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 12-வது தேசிய மாநாட்டில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் துணைப் பொதுச் செயலாளராகவும், இன்றைய மாநிலத் தலைவராக உள்ள இரா.தமிழ்ச் செல்வி, அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 13-வது தேசிய மாநாட்டில் ஆர்.ஜி.கார்னிக் அகில இந்திய தலைவராகவும், சுகுமால்சென் மூத்த துணைத்தலைவராகவும், அஜய் முகோபாத்யாயா கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சம்மேளனத்தின் அகில இந்திய பொருளாளராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் தலைமையிடத்து செயலாளராகவும், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.பீட்டர் பர்னபாஸ் மற்றும் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர் களாகவும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பி.மல்லிகா பத்மினி தேசிய செயற்குழுவில் தமிழகத்தின் சார்பில் மகளிர் பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5, 6, 7 தேதிகளில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்றது.

தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சத்துணவு ஊழியர்களை உடனடியாக பணியில் அமர்த்தவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் தேசிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது . தேசிய குழு கூட்டத்தினை ஆந்திரா மாநில முதல்வர் திரு ரோசயா அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றினார். விஜயவாட நாடளுமன்ற உறுப்பினர் திரு லகடபதி ராஜகோபால் வரவேற்ப்புரையாற்றினார். நாடு முழுவதுமிருந்து 1100மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கடந்த 44 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் பீகார் மாநில அரசுஊழியர்களின் தலைவர்களை அழைத்து பேசி சுமூக முடிவினை எட்ட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்த உரிமையை சட்ட பூர்வமாக வழங்கிட வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என் வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 18 அன்று அகில இந்திய கண்டன நாள் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, September 30, 2010

28.09.2010 - திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளின் புதிய பென்சன் திட்டத்தைக் கைவிடக் கோரி 28.09.2010 மாலை 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் செ.நடராஜன் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் என்.சுப்பிரமணியம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்துநாராயணன் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் கந்தசாமி மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் பாக்கியம் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத துணைத் தலைவர் தோழர் க.ஆறுமுகவள்ளல் நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்.ஐ.சி. பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர் சங்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, September 26, 2010

25.09.2010 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்ட முடிவுகள்

1)    28.09.2010 அன்று புதிய பென்சன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிப்பது.

2)    01.10.2010 அன்று சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு இழப்புகள் குறித்து மாவட்ட அளவிலான முன்னணி ஊழியர் கூட்டம் நடத்தி பிரச்சார இயக்கம் நடத்துவது.

3)    14.10.2010  அன்று அனைத்து வட்டக் கிளைகளிலும் மாலை நேரத் தர்ணா நடத்துவது.

4)    20.10.2010 அன்று மாவட்ட அளவில் பேரணி நடத்துவது.

Wednesday, September 22, 2010

22.09.2010 - ஆர்ப்பாட்டம்

30.08.2010 அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஊழியர்களில் 19 தோழர்களை நிரந்தரப் பணி நீக்கமும்,7 தோழர்களை தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ள தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீளப் பணியமர்த்த வலியுறுத்தியும், அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின் படி பேரணி நடத்த காவல் துறையின் அனுமதி கிடைக்காததால் 22.09.2010 புதன் மாலை  6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 53 ஆண்கள் 157 பெண்கள் ஆக மொத்தம்  210 நபர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை :-                                    திரு து. இராஜகோபாலன், 
                                                            மாவட்டத் தலைவர்
 
கோரிக்கை விளக்கவுரை:-     திரு செ. நடராஜன்,
                                                           மாவட்டச் செயலாளர் (பொறுப்பு)
வாழ்த்துரை:-
                                                           திரு எஸ்.முருகேசன்,மாவட்டத் தலைவர்,
                                                           தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.

                                                           திரு எஸ். சௌந்திரபாண்டியன்,
                                                           BSNL ஊழியர் சங்கம்

நிறைவுரை:-                                 திரு சு. சிவக்குமார்   
                                                           மாநிலத் துணைத் தலைவர்,
                                                          தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

நன்றியுரை:-                                திரு ஜி. விஜயன்
                                                         மாவட்டத் துணைத் தலைவர்


Friday, September 17, 2010

17.09.2010 - ஆர்ப்பாட்டம்

*         வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கிட வலியுறுத்தியும்,    
**       சட்டப்படியான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வலியுறுத்தியும்,
***    விலைவாசி உயர்வுக்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு
****  செலவினத் தொகையை உயர்த்தி வழங்கிட வலையுறுத்தியும்
*****அரசின் அனைத்துத் துறை காலிப் பணியிடங்களிலும் சத்துணவு
           ஊழியர்களை பணி நியமனம் செய்திட வலியுறுத்தியும்

30.08.2010 அன்று அறவழிக்குட்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில/மாவட்ட/ஒன்றிய நிர்வாகிகள் நிரந்தரப் பணிநீக்கம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கக் கோரியும்  17.09.2010 அன்று மாலை 6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் திரு து.இராஜகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) திரு செ. நடராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருமதி பாக்கியம்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் திருமதி சுசீலா, C.I.T.U. மாவட்டத் தலைவர் தோழர் கே.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்டத் துணைத் தலைவர் திரு பி.விஜயகுமார் நன்றி கூறினார்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 86 பேர் கலந்து கொண்டனர்.

Thursday, August 26, 2010

பென்சன் : மனித உரிமை ஆணையம் தலையீடு -பி.இசக்கிமுத்து( நன்றி- தீக்கதிர்)

ஊழியர்களுக்கு வழங்கப் படும் ஓய்வுகால பலன்கள், அவர்கள் கவுரவத்துடன் வாழும் உரிமையை உத்தரவாதப்படுத் துவதாகும். இந்த ஓய்வு கால பலன்கள் காலம் கடந்து வழங் கப்பட்டால் கவுரவமாக வாழும் மனித உரிமை மீறப்பட்டதா கும். அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து வலுப் பெறும் வகையில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச் சனையில் தலையிட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்- 1993ன்படி மனித உரிமை என்பது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட் டுள்ள சுதந்திரமாக, சமத்துவ மாக, கவுரவமாக வாழுதல் என்ப தாகும். மனித உரிமை பாதுகாவ லர்களாக தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் உள்ளன. மேலே கண்ட மனித உரிமைகள் மீறப்பட்டாலோ, மீற காரணமாக இருந்தாலோ அல்லது மீறலுக்கு கவனக்குறைவு காரணமாக இருந்தாலோ மனித உரிமை ஆணையம் மனு பெறப்பட்டதின் பேரில் அல்லது சுயமாக தலை யிட்டு நியாயம் வழங்கும் அதி காரம் படைத்ததாகும்.

இதுவரை காவல் சித்ர வதைகள், காவல்நிலையச் சாவுகள், அரசு அதிகாரி களின் கவனக்குறைவால் ஏற்படும் பாதிப் புகள், சமூக பாதிப்புகள் தொடர்பான மனித உரிமை மீறல் களில் மனித உரிமை ஆணை யம் தலையிட்டு நீதி வழங்க உள்ளது.

ஊழியர்கள், தொழிலாளர் களுக்கு இழைக்கப்படும் அநீதி கள், ஓய்வு கால சலுகைகள் பாதுகாக்கப்படல் போன்ற ‘Service Matters’ களை மனித உரிமை ஆணையம் விசாரிக்க அதி காரம் இல்லை எனக்கூறி மனுக் களை ஏற்க மறுத்த தேசிய மனித உரிமை ஆணையம் தற் போது அளித்துள்ள தீர்ப்புகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘கவுரவமாக வாழும் உரிமை’க்கு அடிப்படையாக ஓய்வுகால பலன்கள் அமை கின்றன. ஓய்வுகால பலன்களை காலம் கடந்து வழங்கப்பட்டால் அது கவுரவமாக வாழும் உரிமை யை பாதிக்கும். அது ஒரு மனித உரிமை மீறலாகும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என சில தலையீடுகளில் தீர்ப்பளித் துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாந்தவுளி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணி யாற்றி 1992ல் ஓய்வு பெற்றவர் சம்பாதேவி என்ற சம்பா ஷா. இவருக்கான பென்சனை வழங் கக் கோரி பல முறையீடுகள் செய்து பலமுறை அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஒன்றும் நடக்க வில்லை. அரசு அலுவலகங் களில் கடைப்பிடிக்கும் சிவப்பு நாடா கொள்கை காரணமாக ஒன்றும் நடக்கவில்லை. கடை சியாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் செய் தார். 07.01.2004ல் இறக்கும் வரைக்கும் அவருக்கும் பென் சன் வழங்கப்பட வில்லை. தேசிய மனித உரிமை ஆணை யம் தலையிட்ட பிறகு 11.02. 2004ல் பென்சனுக்கான உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு, இறந்து போன பெண்ணின் மகனுக்கு 26.10.04ல் வழங்கப்பட்டது. கவு ரவமாக வாழும் மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனக்கூறி உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு ஏன் ரூ.50 ஆயி ரம் அபராதம் விதிக்கக்கூடாது என கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் அறிவிப்பு அனுப்பியது. காலதாமதத்திற்கு சுகாதாரத் துறையே பொறுப் பாகும்; தாங்கள் பொறுப்பல்ல என்று தலைமைச் செயலா ளர் கூறிய கருத்தை நிராகரித்து ஆறுவாரத்திற்குள் ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடாக இறந்துபோன பெண்ணின் மகனுக்கு வழங்க தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. (வழக்கு எண் 14707/24/2003-2004 நாள் : 6.7.10)

பிறிதொரு வழக்கில் தில்லி முனிசிபல் கார்ப்பரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலை மை ஆசிரியர் உஷா கிர்தார் என் பவருக்கான ஓய்வு கால பலன் கள் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டது. உஷா கிர்தார் எம்.சி. பெண்கள் ஆரம்பப் பள்ளி யில் ஆசிரியராக பணியாற்றி 31.02.03ல் ஓய்வுபெற்ற பெண் ஆவார். கல்வித்துறை இயக்கு நருக்கும் மாநகராட்சி கமிஷன ருக்கும் பல புகார்கள் செய் தும் பென்சன் மற்றும் சேமநலநிதி வழங்கப்படவில்லை. வேறு வழி யின்றி 01.07.2004ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலை யீட்டின் பேரில் 09.05.2006 அன்று அவருக்கு ரூ.6,62,774 ஓய்வுகால பலனை 28 மாதம் கழித்து வழங்கப்பட்டது. வழக் கினை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் “ஓய்வு பெறுவதற்கு 6 மாதத்திற்கு முன் பாகவே ஓய்வுகால பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்க வேண்டும்” கால தாமதம் ஏற்புடையதல்ல எனக் கூறி தில்லி மாநகராட்சி ஆணையரிடம் ரூ.25 ஆயிரம் ஏன் நஷ்ட ஈடு கோரக்கூடாது என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது. உஷா கிர்தார் முன்பு வேலை பார்த்த அலு வலகத்தி லிருந்து சர்வீஸ் ரிஜிஸ்டர் வர காலதாமத மானதால் தாங்கள் பொறுப்பல்ல எனக் கூறி நஷ்ட ஈடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப் பினை நிராகரித்து ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடாக 6 மாதத்திற்கு வழங் கிட தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. (தீர்ப்பு நாள் 27.7.10)

ஓய்வுகால பயன்கள் மறுக் கப்படல் மனித உரிமை மீறல் என்ற இந்த உத்தரவு மிகவும் போற்றத்தக்கதாகும். மூத்த குடி மகன்களின் உரிமைகள் பாது காக்கப்பட்டு அவர்கள் கவுரவ மாக வாழ வழி வகை செய்கிறது.

மேலும் அரசு அதிகாரிகள் விரைவில் ஓய்வுகால பலன் களை வழங்க முன் வருவதற்கு இத்தகைய உத்தரவுகள் தூண்டு கோலாக அமையும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தேசிய மனித உரிமை ஆணை யத்தை அணுகலாம்.

Monday, August 23, 2010

21.08.2010 சனிக்கிழமை - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொது மாநாடு

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முதல் மாவட்ட பொது மாநாடு  21.08.2010 சனிக்கிழமையன்று மாலை 3-30 மணிக்கு திருப்பூர், அரிசிக் கடை வீதியில் மாவட்டத் தலைவர் திரு எஸ்.முருகேசன் தலைமையில் தொடங்கியது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவருமான   திரு து.இராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு கே.பால்ராஜ் சத்துணவு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட  ஊதியம், சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட எஸ்.எஸ்.ஏ.பள்ளிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் படி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் விலைவாசி உயர்வுக்கேற்ப மானியத்தை 2ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் திரு மு. சீனிவாசன், சி.ஐ.டி.யு.அமைப்பின் மாவட்டத் தலைவர் திரு கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் திரு கே.பழனிச்சாமி புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் திருமதி என்.சுசீலா நன்றி கூறினார்.  திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, August 21, 2010

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு

    திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முதல் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு  20.08.2010 வெள்ளிக்கிழமையன்று காலை 10-00க்கு மாவட்ட அமைப்பாளர்  திரு எஸ்.முருகேசன் தலைமையில் தொடங்கியது.  அச்சங்கத்தின் கொடியை மாநிலத் தலைவர்  திரு கே. பழனிசாமி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) திரு செ.நடராஜன் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவருமான திரு து.இராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர்  திரு செ.நடராஜன் மாநாட்டினைத் துவக்கி வைத்தார். துமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர்          திரு தோ. ஜான்கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டப் பொருளாளர் திரு சீனிவாசராகவன் மற்றும் ஈரோடு மாவட்டத் தலைவர் திரு எஸ்.சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  துமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் திரு அ.நிசார் அகமது “ நமது பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். மாநிலத் தலைவர் திரு கே.பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.  மாவட்டத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.

        மாவட்டத் தலைவராக திரு எஸ்.முருகேசன், மாவட்ட செயலாளராக திரு கே.பால்ராஜ், மாவட்டப் பொருளாளராக திருமதி என்.சுசீலா, மாவட்டத் துணைத் தலைவர்களாக திரு பி.சண்முகசுந்தரம், திருமதி பி. ரீட்டா, திரு ஆர்.ராமசாமி, திரு வி.ஜெயபால்ராஜ், இணைச் செயலாளர்களாக திரு கே.கருணாகரன், திரு முத்தமிழ்ராஜ், திரு எஸ்.ஆறுமுகம், திரு எம்.கே.பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.